கூடா நட்பு

DreamingAway
2 min readAug 5, 2023

அகராதிகள் பதித்துக் கொள்ளாத ‘அழகான’ வார்த்தைகளையெல்லாம் நண்பர்கள் இல்லாமல் வேறு எப்படி கற்றுக் கொண்டிருக்க முடியும்? இல்ல, இது மாதிரியான நண்பர்களெல்லாம் தவிர்க்க வேண்டியவர்களா? எதுவும் இங்க சரியுமில்ல தவறுமில்ல போடா என்ற வரிகள் பழகிப்போனதாலயோ என்னவோ “தவறான நட்பென்று ஒன்று இருக்க முடியுமா?” என்று யோசிக்கும் போதே யோசிக்கிறதை நிறுத்திக்கனும்னு தோன்றியதையும் மீறிச் சிந்தித்ததாலேயே இந்தப் பதிவு.

எந்த ஒரு தேடலுக்கும் திருக்குறளையும் தோண்டிப் பார்க்கிறது வழக்கம். அட, இருக்கிறதே! நட்பியல் என்ற பிரிவில் பல அதிகாரங்கள், குறிப்பாக, “தீ நட்பு”, “கூடா நட்பு” என்ற தலைப்புகளில். கூடா நட்பு என்றெல்லாம் ஒன்று இருக்கமுடியாதென்ற வாக்கில் நம்பும் போது இப்படி வள்ளுவரே சொல்லியிருக்காரேன்னு பார்த்ததும் கொஞ்சம் ஏமாற்றம்தான்.

என்னுடைய நண்பர்களெல்லாம் எனக்குத் தானாகவே அமைந்தது போலத்தான் இருக்கிறது. பெரும்பாலும் இடம் சார்ந்ததுதான் — வீட்டுப்பக்கம், பள்ளி, கல்லூரி, வேலை. மேலோட்டமாய் பார்த்தால் எந்த விதிகளுமே வைத்துத் தேர்ந்தெடுத்ததாய் தோன்றவில்லைதான். ஆனால் எல்லோரையுமே நண்பர்களாகக் கருதவில்லையே என்ற உண்மையைப் பார்க்கும் போதுதான் அனிச்சையாகவே ஒரு வடிகட்டல் நடந்திருப்பது புரிகிறது. அப்படியே பார்த்தால்கூட, நண்பர்கள் — நண்பர்கள் அல்லாதவர்கள் என்பது மட்டும்தானே? எதற்காகக் கூடா நட்பு?

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு — குறள் 793
ஒருவருடைய குணம், குடி, குற்றம், மற்றும் அவருடைய நண்பர்கள்பற்றித் தெரிந்து ஆராய்ந்த பின்தான் நட்புக் கொள்ள வேண்டுமாம். இது நடக்கற காரியமா? கோப்பெருஞ்சோழன் — பிசிராந்தையார் நட்பெல்லாம் இந்த வள்ளுவ கருத்துக்குள் அடங்குமா?

சின்ன வயதிலும் சரி இப்போதும் சரி, “அவன் கூடச் சேராத!” ன்னு நமக்கு நிறையா சொல்லி இருப்பாங்க. பெரும்பாலான இந்த எச்சரிக்கையெல்லாம் காலப்போக்கில் அர்தமற்றதாகத்தான் போகின்றன. பல பண்புகள் நிரந்தரமானவைகள் இல்லை. காலமும், அனுபவங்களும் எதையுமே மாற்றிக்காட்டும் வலிமை கொண்டவை. தவறென்ற பிம்பமிருந்தாலும் சிலவற்றை சில வயதில் செய்துகொள்ளலாம் — களவும் கற்று மற என்ற வகையில் — இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையின்படி.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு — குறள் 786
எது நட்பு என்பதற்கான நட்பதிகார குறள் இது. யாராலும் எளிதில் மறுக்க முடியாத கருத்து. பெரும்பாலும் திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களும் தலைப்புக்கு ஏற்ற பத்து பண்புகளைக் கூறும். எனக்கென்னவோ கூடா நட்பின் பத்து குறள்களும் ஒரே கருத்தைத்தான் கூறுவது போலுல்லது — உள்ளத்திலிருந்து வரலனா அது நட்பே இல்ல! “தீ நட்பு” பற்றி நான் பெருசா யோசிக்கல, ஆனால் “கூடா நட்பு” இருக்கும்தான் போல. ஒருவேளை நம்பினீங்கனா, அத்தகைய நட்பிலிருந்து விலகிப் போகிறதுக்குத் தயங்க தேவையில்லைதானே?

--

--