அது ஒரு தனி உலகம், அவர்களுக்காக மட்டுமே!

DreamingAway
2 min readFeb 13, 2024

நகரத்துக் காலை நேரத்துப் பரபரப்பு அடங்கியதாலோ என்னவோ, நான் வார இறுதியில் பயணித்த பேருந்தின் ஓட்டுநர் மென்மையான பாடல்களை ஒலிக்கச் செய்துகொண்டிருந்தார். “மீனம்மா” பாடலின் “அம்மம்மா… முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையெல்லாம் ஒரு காவியமே…” என்ற வரிகள் ஒலித்தபோது மெதுவாகத் தூக்கிப் போட்டது — பேருந்தல்ல! அது ஆண் குரலுக்கான வார்த்தைகளாய் தோன்றினாலும், பெண் குரலில் ஒலித்த அந்த வரிகளின் கற்பனை மிகுதி ஏதோ சிந்திக்கச் செய்தது. பார்வையில் உரையாடிக் கொள்ள முடியும்தான், ஆனால் அதைக் காவியமாக்கிக் கொண்ட கற்பனைத்தான் சற்று வியப்படைய வைத்தது.

வண்ணங்களைப் பூசிக் கொண்டு அழகு கொள்ளும் வெண்ணிற ஆடைபோல, கற்பனைகளைத் தரித்துக் கொள்வதில்தானே கவிதைகளே பிறக்கின்றன, அதுவும் காதல் கவிதைகளுக்குச் சொல்லவா வேண்டும்! பொதுவாகக் கற்பனைகளில் பல உண்மையாகுவதை நாம் பார்த்திருக்கிறோம், அறிவியலின் படைப்புகள் பெரும்பாலும் இப்படித்தானே. சட்டென்று ஒரு ஐயம் — காதல் கவிதைகள் எல்லாம் இதற்கு எதிர்மறையாக இருக்குமோ — அதாவது உண்மைகளைத்தான் கற்பனை என்று எழுதிக் கொண்டிருக்கிறார்களோ என்று.

வேம்பின் பைங்காய் என்தோழி தரினே,
தேம்பூங் கட்டி என்றனிர்; இனியே

அற்றால் அன்பின் பாலே!

இது பள்ளிப் பாடத்திலிருந்த குறுந்தொகைப் பாடல். நினைக்கும் போதே நாவில் கசப்பூரும் வேப்பங்காய் எப்படி இனிக்கும்? இதை மூன்று விதமாகப் பார்க்கலாம். (1) காதலிக் கொடுத்தால் கசப்பைப் பொறுத்துக் கொண்டு சுவைத்ததாக இருக்கலாம் (2) உண்மையாகவே அது இனிப்பாகத்தான் இருந்தது. (3) அவர்களின் அன்பின் பிளவைச் சொல்ல மிளைக் கந்தனார் செய்துக் கொண்ட கற்பனை.

சரி, அது இதில் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகிறது. ஆனால் நான் கேட்க நினைப்பது, “உண்மையாகவே அது இனிப்பாகத்தான் இருந்தது” என்பது சாத்தியமா என்பதுதான். தண்ணீரில் மூழ்கி வாழ்விழக்கின்ற தாவரங்களும் உண்டு, தண்ணீரிலேயே மூழ்கி வாழ்கின்ற தாவரங்களும் உண்டு. சின்னதாய் ஒரு மாறுதல் கிடைத்தால் அந்த இனிப்பு எல்லோருக்கும்கூட சாத்தியாமானதாக இருக்கலாம், ஒருவேளைக் காதல் அதைக் கொடுக்கலாம் அல்லது காதல் மட்டுமே அதைக் கொடுக்கலாம். அதாவது, நாம் கற்பனை என்று நினைப்பது, உண்மையில் உண்மையாகவே இருக்கின்றது, இவ்வுலகுக்குள் ஒரு தனியுலகில்.

நனைந்த துணிகளை எப்படிக் காய வைப்பது, நோய் வந்தால் என்னவாவது என்றெல்லாம் அனிச்சையாய் கவலைப்பட்டு மழைத்துளிகளைக் கண்டு ஓடும்போது, தேவர்கள் அவர்களுக்காய் பூமாரி பொழிவது போல் ஒரு சில கால்கள் மட்டும் உற்சாக நடனமிடுவதெல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கின்றது. இதுகூட பரவாயில்லை. வேனிற்கால வெய்யிலின் வெக்கையினுள் வெண்பனி உரசி வந்த இளந்தென்றல் சுகத்தை உணர்ந்து நடப்பார்களே, இதுவெல்லாம் இன்னுமொரு உலகம் இருந்தால் மட்டுமே இயலும் என்பது என் கருத்து. அது ஒரு தனி உலகம் — அது அவர்களுக்காக மட்டுமே!

இப்பொழுதெல்லாம், “கற்பனையை விஞ்சிய” என்று செய்திகளில் கேட்கும் போதெல்லாம், “அந்த உலகத்து நிகழ்வு” எனத் திருதிக் கேட்டுக் கொள்கிறேன். இங்கும் அங்குமாய் காதலிப்பவர்களுக்கான ஒரு தனி உலகம் நம்மைச் சுற்றி நீர்க்குமிழிகளாய் எங்கும் இருப்பதாகவே நம்பிக்கை கொள்ளத் தோன்றுகிறது. நிரந்தறமற்றதுதான் எனினும், அதற்குள் உருவெடுக்கும் உண்மைகளின் பிம்பங்கள்தான் நமது கவிஞர்களின் கவிதைக்குள் கற்பனையாய் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன என்பது எனது கற்பனை மட்டுமே.

--

--